சமூகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலக்கரித் தொகுதி தொடர்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், தேவையான கிலோ கலோரி அளவில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியதோடு, அதற்கமைய சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
“கொள்முதல் நடவடிக்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. முதலாவது 60,000 மெட்ரிக் தொன் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், நிலக்கரி நிறுவனத்தினால் இந்தியாவுக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில், அதில் தேவையான கிலோ கலோரி அளவில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அபராதம் அறவிடப்படுகிறது. இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
இலங்கையில் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாதிரிப் பரிசோதனையில் தரம் இல்லாவிட்டால், கட்டாயமாகச் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அபராதம் செலுத்த வேண்டி ஏற்படும்,” என்று கூறினார்.
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்காகத் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் ஆயிரம் கோடி ரூபாவுக்கு அண்மித்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
