உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு அலரிமாளிகையில் இன்று(23) ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் அரச தலைவரைச் சந்தித்த போது விடுத்த கோரிக்கையை அடுத்து சர்வகட்சி மாநாடு அழைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய ஆகிய கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் மாநாட்டை புறக்கணிக்கவுள்ளனர்.

மாறாக 11 கட்சிகளின் இரண்டு பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) ஆகிய கட்சிகளும் மாநாட்டைப் புறக்கணிக்கவுள்ளன.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்