ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை இருக்கிறது எனவும் ஜனாதிபதியின் வடக்கு வருகை தொடர்பில் அதிகார பூர்வ அழைப்பு எதுவும் எமக்கு விடுக்கப்படவில்லை எனவும் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வடமாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும், அவர்களை காணாமல் ஆக்கியவர்களாகவும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.
ஆனால், இந்த தலைமுறை ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தை பார்க்கவில்லை.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூறவரவில்லை.
இளம் துடிப்பான நல்ல விடயங்களை பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக அவர் இருக்கிறார்.
எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா, இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஜனாதிபதியின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிந்ததுடன், அதிகார பூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை.
மகிந்தராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கூட, ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ வடக்குக்கு வரும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடும் பண்பு இருந்தது. ஆனால் தற்போதைய அரசு தனது கட்சி உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனைகளை மேற்கொள்கின்றது.
ஜனாதிபதி மக்களைச் சந்திப்பது வரவேற்கத்தக்கது. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அவர் அறிந்து கொள்ளவேண்டும்.
இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான திசைக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், தமிழ் மக்களும் ஏனைய இனங்களைப் போல சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழலை எவராவது ஏற்ப்படுத்தினால் அத்தகைய முயற்சிக்குத் நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
