அரசியல்உள்நாடு

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள் – ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளை நெறிப்படுத்துதல், அவற்றில் நிலவும் சிக்கல்கள் குறித்தும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவாவி சுத்திகரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீயாய்வு செய்யப்பட்டது.

மேலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான விடுதிகளை சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பிலும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திமிங்கலங்களை பார்வையிடும் மையங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர ஆகியோருடன் அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், சுற்றுலாத் துறையின் முக்கிய தரப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி பயன்படுத்தவிருக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாகிறது

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்