உள்நாடு

சிறைச்சாலை உணவை நிராகரித்த பலங்கொட கஸ்ஸப தேரர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை (தானத்தை) நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டிருந்தது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை பூமியில் அறநெறிப் பாடசாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், விகாராதிபதி மற்றும் நிர்வாக சபையினர் இணைந்து கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அங்கு புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த காணியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் அனுமதியற்றது என கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் பிக்குகளுக்கு அறிவித்திருந்தனர்.

பின்னர் அன்று இரவே புத்தர் சிலையை அவ்விடத்திலிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதுடன், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி இரண்டு தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எழுந்த எதிர்ப்பு காரணமாக மறுநாளே மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலையை வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை தொடர்பான பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இவ்வழக்கின் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 09 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இவர்களில் திருகோணமலை கோட்டை வீதி ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த திருகோணமலை நீதவான், திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களையும், ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

மீடியாகொட துப்பாக்கிச் சூடு – காயமடைந்த பெண் பலி

editor

பதுளை பொது வைத்தியசாலையில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழப்பு!