சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு தங்க ஆபரணக் கடைகளில் ரூ. 102,000,000/- (பத்து கோடி இருபது இலட்சம்) பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி.யின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 46 வயதுக்கு இடைப்பட்ட கொஸ்கம, ஹங்வெல்ல, தங்கொட்டுவ, மில்லேவ மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் தங்க ஆபரணக் கடைகள் இரண்டுக்குள் சென்று, அங்கிருந்து பத்து கோடி இருபது இலட்சம் ரூபா பணத்தை கைப்பற்றி அங்கிருந்த ஏழு ஊழியர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் நான்கு பேரிடம் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திவிட்டு, கொண்டு செல்லப்பட்ட பணத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாவை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அடையாள அணிவகுப்புக்காக நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவு இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
