அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானின் ஜனாதிபதி அநுர

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது.

இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இத் தருணத்தில், இலங்கை அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி வருவதாகவும், இந்த அபிவிருத்தியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படும் என்றும், அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார்.

“எக்ஸ்போ 2025 ஒசாகா” கண்காட்சியில் இலங்கை மற்றும் ஜப்பானின் கண்காட்சி அரங்குகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்போ 2025 கண்காட்சி மூலம் இலங்கைக்கு தனது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை உருவாகும் என்று தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், கடினமான காலங்களில் ஆதரவளித்தும் வெற்றிகரமான காலங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வலுவான பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:

நட்புறவு என்பது மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைக்கிறது. எல்லைகளைக் கடக்கின்றது.

மனித உறவுகளை வளர்க்கின்றது. மேலும், ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக பொதுவான இலக்குகள் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது.

“எக்ஸ்போ 2025” கண்காட்சி இந்த இலட்சியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். நட்புறவு மற்றும் பொதுவான இலக்குகளை கொண்டாடும் இந்த நேரத்தில், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் உங்களுடன் இணைவதை கௌரவமாகக் கருதுகிறேன். “எக்ஸ்போ 2025” என்பது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாகும்.

இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம்.

எக்ஸ்போ போன்ற சர்வதேச தளங்களில் எமது பலம் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சமூகத்தில் பொறுப்புக் கூறத்தக்க மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்ட பங்காளராக எமது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உலகின் ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க ஒரு சிறந்த
வாய்ப்பாகும்.

இதன்போது, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், விவசாயம் மற்றும் நமது ஏராளமான கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு உள்ளிட்ட அதிக திறன் கொண்ட துறைகளை வளர்ப்பது தொடர்பான எமது தெளிவான கொள்கையை நன்கு பிரதிபலிக்கிறது.

“எக்ஸ்போ 2025” இன் தொனிப்பொருள் “நமக்கான எதிர்கால சமூகத்தை உருவாக்குதல்” என்பதாகும். எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதே இதன் நோக்காகும்.

உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இந்த சகாப்தத்தில், இலங்கை நமது பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது.

தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.

இதன்போது, அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அந்தச் சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் உறுதிசெய்கிறோம்.

எக்ஸ்போ 2025 கண்காட்சி ஊடாக இலங்கை தமது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, சமீப காலங்களில் அது முன்பை விட வலுவடைந்துள்ளது.

எமது நெருங்கிய நண்பராக, கடினமான காலங்களில் ஜப்பான் எமக்கு ஆதரவளிப்பதுடன், வெற்றியின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளியாகவும் உள்ளது.

பல இலங்கையர்கள் இப்போது ஜப்பானில் வசிக்கின்றனர்.

இதன் மூலம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் உள்ள இலங்கை அரங்கம் நமது நாட்டின் விடாமுயற்சி, கலாசாரப் பெருமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று எக்ஸ்போ 2025 ஐப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரங்கையும் இலங்கை தின நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசும் எக்ஸ்போ 2025 சங்கமும் வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் பண்டைய கலாசார பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் இலங்கைத் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதன்போது பெளதிக முன்னேற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வளமான உலகத்தையும் அழகான எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

ஒவ்வொரு கனவும் நனவாகும், அனைவரும் பிரகாசிக்கக்கூடிய மற்றும் தேசத்திற்கு மகத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய உலகை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா (Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

மீகொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- ஐந்து உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!