சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டு உதவி வசதிகளுக்காக ரூ. 14 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டு உதவி திட்டம் குறித்து இன்றையதினம் (15) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சமூக நலன்புரி, நன்னடத்தைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற கைத்தொழில்கள் அமைச்சின் சமூக சேவைகள் நிதியத்தின் மூலம் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதுவரை 26 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீட்டு உதவி தொகைக்கான காசோலைகள் தபால் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் மேற்படி சலுகைகளைப் பெற்று கொள்ளக்கூடிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இருந்தால் அவர்கள் அருகிலுள்ள பிரதேச செயலகப் பிரிவிற்குச் சென்று அங்கு சமூக சேவைகள் பிரிவு அதிகாரியை சந்தித்து அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து தெரிந்து கொள்ளுமாறும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்