கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் முறையற்ற விதத்தில் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதாகவும் இது விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.பைறூஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மதியம் அட்டாளைச்சேனை லொயிஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையினர் பங்கேற்றனர்.
இதன்போது, சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் பைறூஸ் உரையாற்றும்போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த பல வருடங்களாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பெரும் ஊழல் மோசடியில் பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு பல கடிதங்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் நேர்மையான ஆட்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக உழைத்து வருகின்ற தற்போதைய ஜனாதிபதியின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கும் முயற்சி எடுத்து வருகின்றோம்.
கூடுதலான பயணிகள் இல்லாத இடங்களில் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு மேலதிக பஸ்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது, தேவையில்லாத சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரத்தை நீடித்துக்கொடுப்பது.
திணைக்கள வாகனத்திற்காக இலட்சக்கணக்கான பணத்தை மோசடியாக செலவழித்திருப்பது,16வருடங்களாக தொடர்ச்சியாக பணிப்பாளர் நாயகம் கதிரையில் அமர்ந்திருப்பது என பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.பைறூஸ் மேலும் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருடங்களில் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வாகனத்திற்கு எரிபொருள் செலவாக 43 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரும் மோசடியை நிருபித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படுகின்றவரே போக்குவரத்து அதிகார சபைக்கு தவிசாளராக செயற்படுகின்றார்.
ஆனால், தவிசாளர் இந்த ஊழல், மோசடிக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் காட்டமாகத் தெரிவித்தார்.
-எஸ்.எம்.அறூஸ்
