உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, பரந்தனில் கோர விபத்து – இருவர் பலி – உதவுவதற்கு பதிலாக, புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் 256வது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக இன்று (29) அதிகாலை 5:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற அரச பேருந்து, ஏ9 வீதியில் 256வது கிலோமீட்டர் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பரந்தன் பகுதியில் இருந்து வந்த கனரக டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியது.

அதே நேரத்தில், கிளிநொச்சி நோக்கி கசிப்புடன் பயணித்த இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்துடன் மோதியது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து இடத்தில் கூடியிருந்த பலர், காயமடைந்தவருக்கு உதவுவதற்கு பதிலாக, புகைப்படம் எடுப்பதிலும், வீடியோ பதிவு செய்வதிலும் கவனம் செலுத்தியதாக அவதானிக்கப்பட்டது.

காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியபோதும், எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சப்தன்

Related posts

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

மின் துண்டிக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

editor