ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனைச் (George Yeo Yong-Boon) சந்தித்தார்.
சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே (Lee Kuan Yew School of Public Policy – LKYSPP) இச்சந்திப்பு இடம்பெற்றது.
முற்போக்கான தலைமைத்துவம், வலுவான நிறுவனங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் தாக்கம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டது என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் இருதரப்பினரும் பிரதானமாக கவனம் செலுத்தினர்.
தனிப்பட்ட பிம்பத்தின் மீது மட்டும் சார்ந்து இல்லாமல் ஈடுகொடுக்கும் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறையாள்கைகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அனுபவங்களிலிருந்து நாட்டிற்கு பாடங்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நீண்டகால மூலோபாயத் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான அதன் இயலுமை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.
அவ்வாறே, தேசிய பேரிடர்கள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளின் தாக்கங்களை உள்ளடக்கியவாறு இலங்கை சமீப காலங்களில் பல பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்து ஜார்ஜ் இயோ பூனுக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிறுவன ஆற்றலை வலுப்படுத்துதல், ஏற்றுமதி சந்தைகளைப் பன்முகப்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் வெளிநாட்டு பொருளாதார உறவுகள் போன்ற துறைகளில் விசேட நிபுணத்துவ வாண்மையை முன்னேற்றுவதன் அவசியம் என்பனவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், இச்சந்திப்புக்கு மத்தியில்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, முன்னாள் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-பூன் அவர்கள், பொதுக் கொள்கை முடிவெடுப்பதற்கான எதிர்கால பன்முக பங்குதாரர் பட்டறைகள் மூலம் இலங்கையுடன் நேரடியாக தொடர்புபட்டு, சிங்கப்பூரின் அரசாளுகை, பொருளாதார முன்னுதாரண மாற்றம், வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயம் மற்றும் தொழில்நுட்ப தடைகளை முகாமைத்துவம் செய்வதில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தார்.
ஜார்ஜ் இயோ அவர்கள், சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளதோடு, தகவல் மற்றும் கலை விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இவரது இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கைக்கான பங்களிப்புகளுக்காக தலைசிறந்த இராஜதந்திரியாகவும், மூலோபாய சிந்தனையாளராகவும் சர்வதேச அளவில் பரவலாக மதிக்கப்படும் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.
