வகைப்படுத்தப்படாத

எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தூய்மையான, நேர்மைமிக்க, அரசியலுக்காக பெண்களின் அரசியல் பங்குபற்றுதலை அதிகரிப்பது எதிர்காலத்தில் முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 2017 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணி ஏற்பாடு செய்த விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் நினைவுகூரப்பட்டு, நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

தூய்மையான அரசியல் வகிபாகங்கள் இன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மக்களுக்காக தூய்மையானதும் நேர்மையானதுமான சேவையை ஆற்றும் பலம் எமது தாய்மாருக்கும் மகள்மாருக்கும் இருக்கின்றது. அப்பலத்தை இனங்கண்டு எதிர்கால தேர்தல்களில் மகளிர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.

ஊழல், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு அரச வளங்களை தவறாக பயன்படுத்துவோரன்றி, வெற்று கோஷங்கள் இல்லாத நேர்மையான, தூய்மையான அரசியல் இயக்கத்தையே இன்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மக்களது அந்த அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாடுபடுவதாக கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கைகளிலும் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளிலும் மகளிர் பிரதிநிதித்துவத்தையும் அவர்களுக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களையும் உயர்த்துவதற்கு அரசாங்கம் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான நினைவுப் பரிசுகள் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் முகநூல் (Face Book) பதிவு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, அமைச்ர்களான சுசில் பிரேம ஜயந்த, நிமல் ஸ்ரீபால டி சில்வா, ராஜாங்க அமைச்சர்களான சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே, சுமேதா ஜி ஜயசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணி உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னாள் பிரதமர் அமரர் ட்டிலி சேனனாயக்கா பிறந்த தினம்

மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் ஜே.வி.பி எழுப்பியுள்ள கேள்வி

வேலையில்லா பட்டதாரிகள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு