ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை, எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மப்றூக் மீது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் நேற்று (02) இரவு, காடையர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில், நிஸாம் காரியப்பர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரிடம், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
இந் விடயம் தொடர்பில் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில்;
“ஊடகவியலாளர்களை எந்தக் காரணம் கொண்டும் அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதுதான் எனதும் எனது கட்சியினதும் நிலைப்பாடாகும். சகோதரர் மப்றூக் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்று எனக்குத் தெரியாது.
அது தொடர்பில் எனது கவனத்துக்கு உத்தியோகபூர்வமாக கொண்டு வரப்படும் போது, அது பற்றி நிச்சமாக விசாரிப்போம்.
ஆனால் எந்தக் காரணம் கொண்டும், ஊடவியலாளர்கள் மீது வன்முறை புரிவது அடிப்படையில் பிழையாகும். சாதாரணமாகவே வன்முறை என்பது கூடாதது. எமக்கு விருப்பமான செய்திகளை எழுதினாலும், விருப்பமற்ற செய்திகளை எழுதினாலும் – அதற்காக ஊடகவியலாளர் மீது வன்முறையை பிரயோகிக்க முடியாது.
ஒரு தவறான செய்தியை ஊடகவியலாளர் ஒருவர் எழுதினால், அதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்க வேண்டும், அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, நிச்சயமாக இதுபற்றி நான் விசாரிப்பேன்.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சகோதரர் மப்றூக் என்னுடைய நல்லதொரு நண்பர், நான் மதிப்பவர். அவரிடம் இது தொடர்பான விடயங்களை நான் கேட்டறிந்து கொள்வேன்.
இந்த விடயத்தில் குற்றஞ்சாட்டப்படுவரின் நிலைப்பாடுகளையும் அறிந்து கொண்டு எமது எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும்” என்றார்.