அரசியல்உள்நாடு

ஈழ யுத்தம், காசா யுத்தம் இரண்டும் அப்பாவி மக்களின் பேரழிவில் ஒத்துப்போகின்றன – மனோ கணேசன் எம்.பி

ஈழ யுத்தம், காசா யுத்தம், இரண்டுக்குமான பின்னணி அரசியலை விட்டு பார்த்தால், இரண்டும் சில வித்தியாசங்களுடன், அப்பாவி மக்களின்
பேரழிவில் ஒத்து போகின்றன” என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகப்புத்தக் கணக்கில் அவர் இட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘ஈழ யுத்தம், காசா யுத்தம், இரண்டுக்குமான பின்னணி அரசியலை விட்டு பார்த்தால், இரண்டும் சில வித்தியாசங்களுடன், அப்பாவி மக்களின் பேரழிவில் ஒத்து போகின்றன. காசா யுத்தம். முதலில், கால கட்டம். அடுத்தது, அந்த களம், எண்ணெய் வளம் நிரம்பிய உலகிற்கு இன்று வரை தேவை படும் பூமி. இன்று சமுக மீடியா, நிறுவன மீடியா, இரண்டுமே துணிகரமாக பணி செய்வதால், என்னத்தான் குண்டடித்து சிதறடித்தாலும், காசா கொடுமைகள் உடனுக்கு உடன் உலகத்துக்கு அறிவிக்கபட்டுக்கொண்டே இருக்கின்றன.

“இன்றைய உலக ஒழுங்கினால் அது இன்றுவரை தடுக்கப்படாமல் இருந்தாலும், கண்ணுக்கு முன்னே தெரியும் குற்றவாளி தடுக்கப்படாமல் இருந்தாலும், அது இன்னும் நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது என, தினசரி கொல்லப்படும் அப்பாவி காசா குழந்தைகளின் பெயரால் நான் நம்புகிறேன்.

“ஈழ யுத்தம். இது நிகழ்ந்த களம், நில தொடர்பற்ற தென்னாசிய தீவு. இன்று அறியப்பட்டுள்ள இந்து சமுத்திர கடல் வழி கேந்திர முக்கியத்துவம், அன்று இந்தளவு பிரபலம் இல்லை. உலகை காப்பாற்ற புறப்பட்ட, ஐ.நா சபை தன் அலுவலகத்தை தன்னிச்சையாக மூடி, “போக வேண்டாம்” என பரிதாபமாக விழுந்து போராடிய தமிழ் மக்களை கை விட்டு வெளியேறியதால், அந்த கொடூர யுத்தம் இன்று வரை “சாட்சியமற்ற யுத்தம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

“இது, ஐ.நா அமைப்புக்கு உள்ளகமாக தெரியும். அந்த குற்ற உணர்ச்சி அவர்களுக்குள் உள்ளகமாக இழையோடுகின்றது. கடைசியாக இலங்கை வந்த வொல்கரின் (Volker Türk) முகத்துக்கு நேரே, “நீங்கள் ஈழத் தமிழரை கைவிட்டுப் போனதால், அது சாட்சியமற்ற யுத்தமாக கருதப்படுகிறது” என நான் கூறிய போது, அவர் கண்களிலும், அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த, மார்க் அன்ரே (Marc-André) முகத்திலும் ஒரே மின்னலை கண்டேன்.

“ஆனால், இவர்கள் அதிகாரிகள். அவர்களுக்கு தெரியும். எவருமே பொறுப்பெடுக்க மாட்டார்கள். சாட்சியமற்ற யுத்தம் காரணமாக ஈழத் தமிழரின் வாழ்வு ஒரு தேசமாக தாயகத்தில் சிதறடிக்கப்பட்டு விட்டது என்று இவர்களுக்கு தெரியும்.

“தேசமாக சிதறல் என்பது இதுதான் – தம் இளமையை, குடும்ப வாழ்வை தொலைத்து விட்டு, சிறையில் வாடுவோர் – போராட்டத்தில் வீர மரணம் அடைந்தோர், அரச பயங்கரவாதத்தின் கோர பிடியில் இருந்து தப்பி ஓட முயன்று சமுத்திரத்தில் சங்கமமானோர் – வெட்டி, சுட்டு சாய்க்கப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, இந்த பூமியில் புதை குழிகளுக்குள் சங்கமமானோர் – விடை இல்லாத இந்த தேசத்தில் வலிந்து காணாமல் போனோர் – வாழ்வியல் சிதறடிக்கபட்டு, புது வாழ்வை நோக்கி, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா முழுக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே என்றும், அப்புறம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என சென்று வாழ்வோர் – கடைசியாக தமிழக அகதிகள் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்து மறைவோர்” என்று மனோ கணேசன் எம்.பி பதிவிட்டுள்ளார்.

Related posts

வீடியோ | கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கை தமிழர்

editor

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா நீதிமன்றத்தில் சரணடைந்தார்

editor