இளைஞன் ஒருவனை கழுத்து நெரித்து கொலை செய்து சடலத்தை ஹோமாகம மாற்று வீதியில் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் ஜூலை 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் நால்வரும் கொழும்பு மாதம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 மற்றும் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் கார் கேகாலை – மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.