சீரற்ற வானிலை காரணமாக நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்களைக் கையாள்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த நாணயத் தாள்கள் மேலும் சேதமடைவதைத் தடுக்கவும், அவற்றைச் சரியான முறையில் கையாளவும் கீழுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- நனைந்த நாணயத் தாள்களை வேறாக்குதல்
நனைந்த நாணயத் தாள்களை மிகவும் அவதானமாகவும் மென்மையாகவும் கையாளவும்.
நாணயத் தாள்கள் கட்டுகளாக இருந்தால், அவற்றை ஒரேயடியாக வெளியே இழுப்பதைத் தவிர்க்கவும்.
நாணயக் கட்டுகளை அவிழ்த்து, ஈரத்தை உறிஞ்சக்கூடிய ஒரு பொருளால் சுற்றி, அறை வெப்ப நிலையில் மெதுவாக உலர விடவும்.
நாணயத் தாள்கள் ஒன்றோடு ஒன்று பிரியாதவாறு ஒட்டியிருந்தால், பணக்கட்டை குளிர்ந்த அல்லது மிதமான சூடுள்ள சுத்தமான நீரில் அமிழ்த்தி, பின்னர் தாள்களைத் தளர்வாக்குவதற்காக ஒரு முனையைப் பிடித்து மெதுவாக அசைத்து, தாள்களைப் பிரிக்க முயற்சிக்கவும்.
சுடு நீர், சலவைக்குப் பயன்படுத்தும் தூள் அல்லது இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.
- நாணயத் தாள்களை உலர்த்துதல்
ஒவ்வொரு நாணயத் தாளையும் சுத்தமான, உலர்ந்த மேற்பரப்பில் (மெல்லிய துணி, கடதாசி அல்லது ஈரத்தை உறிஞ்சும் கடதாசி) விரித்து வைக்க வேண்டும். அந்த மேற்பரப்பு வர்ணங்களினாலோ அல்லது அச்சிடப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
காற்றோட்டம் உள்ள இடத்தில் நாணயத் தாள்களை இயற்கையாகக் காற்றில் உலர விடவும்.
மின் அழுத்தி (Irons), இலத்திரனியல் வெதுப்பி (Ovens) அல்லது எவ்வித அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும் உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டாம்.
- பரிமாற்றத்திற்காகச் சமர்ப்பித்தல்
முழுமையாக உலர்ந்த பின்னர், கொடுக்கல் வாங்கல்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது எனத் தோன்றும் நாணயத் தாள்களை, பரிமாற்றிக் கொள்வதற்காக பொதுமக்கள் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்கலாம்.
