இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர் அவர்களின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, செனட் சபையின் பரிந்துரைகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செனட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்னிலையில் எரிக் மேயர் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்தே இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவராகக் கருதப்படும் எரிக் மேயர், இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். அவர் அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவதுடன், தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் நேற்று (16) தனது பதவியிலிருந்து விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
