இன்று நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சர்வதேச சவால்கள், பொருளாதார சவால்கள் மற்றும் சமூக ரீதியான சவால்கள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டு வருவதனால், நாடு கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தாய்நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை நிலைநாட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பலவீனமான கட்டத்தில், நாடு அதிகரித்த பல்வேறு வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
எனவே நாம் ஒரு நாடாக கைகோர்த்து நாட்டின் பாதுகாப்பிற்காக முன்நிற்க வேண்டும். வார்த்தைகளால் மட்டுமல்லாது, செயல்களாலும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரெட்டியே தேரருக்கு கௌரவமளிக்கும் முகமாக நடந்த நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
புத்த சாசன அமைச்சினால், புத்தசாசன நிதியத்தால் புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரெட்டியே தேரர் இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த மதத்திற்கு போலவே பிற மதங்களுக்கும் சமமான மதிப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டில் உள்ளோர் இல்லாதோர் இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஒருவராக சங்கைக்குரிய அக்குரெட்டியே தேரர் திகழ்கிறார். வறுமையை ஒழிப்பது முதன்மையான முன்னுரிமையான பணியாக அமைந்து காணப்பட வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 50% ஆனோர் பன்முக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் கூட இதனை வெளிக்கொணர்ந்துள்ளன.
ஏழைகள் நாட்டிற்கு தலைவலியாக அமையாத வகையில், முன்னேற்றம் மற்றும் சௌபாக்கியம் மிக்கவர்களாக அமையும் விதமாக வலுவான வறுமை ஒழிப்புத் திட்டமொன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் சங்கைக்குரிய அக்குரெட்டியே தேரர் எப்போதுமே மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பேசியுள்ளார். நமது நாட்டினது அரசியலமைப்பில் பழைமையான வரையறுத்த மனித உரிமைகளே அடங்கியுள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, பொருளாதார, சமூக, கலாச்சார, மத, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் இதில் உள்ளடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.