இந்த அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வையும், திட்ட வரைபடமொன்று காணப்படுவதாக தெரியவில்லை.
இதைவிடுத்து அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதழொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்துக்கான வெளியை சுருக்குவது அரசாங்கத்தின் பணியல்ல.
பாதிக்கப்பட்ட தாய்நாட்டிற்கு நிவாரணங்களைப் பெற்றுத் தரும், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தக்கூடிய புதிய பயணமொன்றை ஆரம்பிப்பது தேவையாக காணப்பட்டாலும், அரசாங்கத்தின் இதுவரையான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இதைக் கண்டு கொள்ள முடியாதுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
டித்வா சூறாவளிக்கு முன்னர் நமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களித்த விவசாயம், சேவைகள் துறை மற்றும் தொழிற்துறைகள் சூறாவளிக்குப் பிறகு பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளன.
இந்தத் துறைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பினருக்கு சேவைகளைப் பலப்படுத்தி, அவர்களைப் வலுப்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
இந்தத் துறைகளில் உள்ளவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், அது முழுப் பொருளாதார செயல்முறையையும் பாதிக்கும் என்றும், அதன் பாதகமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்புக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்றுமதித் துறைக்கு, உற்பத்தித்துறைக்கு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் தரப்பினர் பெற்றுத் தரும் பங்களிப்பு குறைந்து விடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரச அதிகாரிகளுக்கு அடிபணியாமல் தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இது தேசிய நிகழ்ச்சி நிரலின் முதன்மை அம்சமாக அமைந்து காணப்பட வேண்டும். வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் சேதமடைந்தவர்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தற்போது தேடி வருகிறது.
மக்களை ஏமாற்றாது, வாக்குறுதியளித்த நிவாரணங்களை அதே முறையில் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் இன்னும் IMF இணக்கப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.
வெளிநாட்டு பொருளாதார வல்லுநர்கள் நமது நாட்டு மக்களைக் கருத்தில் கொண்டு செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனை ஒத்திவைப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, 2/3 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் இதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். அரசாங்கம் IMF இலிருந்து 200 மில்லியன் டொலர் அவசரக் கடனைப் பெற்றிருந்தாலும், இந்தக் கடனுக்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கடினமான நேரத்திலும் அரசாங்கத்தால் சலுகைக் கடனைப் பெற முடியாமல் தானே போயுள்ளது. இந்த வழியில் சென்று ஒரு நாட்டால் முன்னேற முடியாது. தலைதூக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
