அரசியல்உள்நாடு

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2013/2014 காலப்பகுதியில் கல்முனை மாநகர மேயராக தான் பதவி வகித்தபோது, அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து, 75 வருட கால பழைமை வாய்ந்த, பாவனைக்கு உதவாத கல்முனை மாநகர சபைக் கட்டிடத்திற்குப் பதிலாக கேட்போர் கூடம் மற்றும் சபா மண்டபம் உள்ளடங்களாக அனைத்து வசதிகளும் கொண்ட புதிய அலுவலக கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான ஒத்துழைப்பைக் கோரியதற்கு அமைவாக நிதியுதவி அளிக்க இந்திய அரசாங்கம் முன்வந்திருந்தது. எனினும் அப்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அனுமதி கிடைத்திருக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில், தற்போதைய இந்திய உயர்ஸ்தானிகரான சந்தோஷ் ஜாவை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சகிதம் அண்மையில் சந்தித்த நிசாம் காரியப்பர் அவரிடம் இத்திட்ட முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். இதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அனுமதி பெற்றுத் தரப்பட்டால் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்திருக்கிறார்.

இந்நிலையில் இத்திட்ட முன்மொழிவுக்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முறையே கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினதும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு அமைவாக அவற்றின் அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் நிசாம் காரியப்பர் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த திட்ட முன்மொழிவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவிருப்பதாகவும் இவ்விடயத்தை கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறும் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவை அவர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கென அதிகளவு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை இந்திய அனுசரணையுடனான அபிவிருத்தித் திட்டங்களில் உள்வாங்க முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்திருந்த நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான தனது நீண்ட கால முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை