இலங்கையில் Telegram, WhatsApp மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இணையவழி நிதி மோசடிகள் (Online Financial Frauds) குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், 2026 ஆம் ஆண்டில் இத்தகைய குற்றங்களைத் தடுக்கத் திட்டமிட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள பிரதான மோசடி வகைகள்:
கடன் மற்றும் இலகு பண மோசடிகள்: சமூக வலைத்தளங்கள் ஊடாக “உடனடி கடன்” அல்லது “மீள செலுத்தத் தேவையில்லாத கடன்” என விளம்பரப்படுத்தி, பின்னர் சேவைக்கட்டணம் (Service fee) அல்லது பதிவுக் கட்டணம் எனக் கோரி பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுதல்.
சில சந்தர்ப்பங்களில் சிறிய கடன்களை வழங்கிவிட்டு, அதீத வட்டியைக் கோரி அச்சுறுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மோசடிகள்: வீட்டில் இருந்தே வேலை (Work From Home) அல்லது தரவு உள்ளீடு (Data Entry) மூலம் அதிக சம்பளம் தருவதாகக் கூறி பதிவுக் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
போலி இணைப்புகள் (Phishing Links): வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அல்லது விநியோக நிறுவனங்களைப் போன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட இணைப்புகளை (Links) அனுப்பி, அவற்றின் மூலம் உங்களின் கடவுச்சொல் (Password) மற்றும் OTP இலக்கங்களைத் திருடுதல்.
காதல் மற்றும் பரிசுப் பொருட்கள்: போலியான கணக்குகளை உருவாக்கி நட்பைப் பாராட்டி, வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பரிசுப் பொதிகள் வந்துள்ளதாகக் கூறி, அவற்றை விடுவிக்கப் பணம் கோருதல்.
முதலீடு மற்றும் அதிர்ஷ்ட லாபங்கள்: Crypto, Forex மற்றும் பாரிய பணப்பரிசுகள் கிடைத்துள்ளதாகக் கூறி, அவற்றைப் பெறுவதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தக் கோருதல்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்தல்: சிறுவர்களைக் கவரும் வகையில் ‘Gaming top-ups’ அல்லது ‘Free skins’ போன்ற ஆசைகளைத் தூண்டி பணத்தைப் பறித்தல் மற்றும் முதியவர்களிடம் உதவி கோருவது போல நடித்து ஏமாற்றுதல்.
பாதுகாப்பாக இருக்க பொலிஸார் வழங்கும் ஆலோசனைகள்:
உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளை (Verified badges/Official pages) மாத்திரம் நம்புங்கள்.
உங்களது வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொல், OTP இலக்கம், PIN இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை பிரதிகள் போன்றவற்றை எவருக்கும் வழங்க வேண்டாம்.
அறியப்படாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) அழுத்த வேண்டாம்.
எவருக்காவது பணத்தை அனுப்பும் முன்னர், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களின் வங்கிக் கணக்கை ஏனைய நபர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம்.
இவ்வாறான இணையவழி நிதி மோசடிகளுக்கு உள்ளாகும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இணையக் குற்றப் பிரிவிடம் (Cyber Crime Unit) முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
