இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் தீர்மானமிக்க ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது.
இது இலங்கையில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய ஜோ ரூட், தனது 20-வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 111 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட உயர்வுக்கு அடித்தளமிட்டார்.
இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி ப்ரூக் மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார்.
வெறும் 57 பந்துகளில் சதம் விளாசிய அவர், 137 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது 3-வது ஒருநாள் சதமாகும்.
இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இங்கிலாந்து அணி தனது துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹமதுவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது.
அவர் 24 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தத் திணறினர். வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதன்படி, 358 என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் பவன் ரத்நாயக்க, தனி ஒருவராகப் போராடி தனது முதலாவது ஒருநாள் சர்வதேச சதத்தைப் (121 ஓட்டங்கள்) பதிவு செய்தார்.
எனினும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்ததால், இலங்கை அணியால் இலக்கை அடைய முடியவில்லை. போட்டியின் 47-வது ஓவரில் சேம் கரன் பவன் ரத்நாயக்கவை போல்ட் செய்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 121 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க: 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
