அரசியல்உள்நாடு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சிக்கு எதிரானதாகவே அமையும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சியினருக்கு எதிரான போராட்டமாகவே அமையும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர் தற்போது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நினைவு படுத்தவே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது விந்தையாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 200 சம்பளம் வழங்குவதை எதிர்க்கின்றார்கள் என குறிப்பிட்ட அமைச்சர் அந்த வகையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ரூ. 200 சம்பளத்தை வழங்குவது உறுதி என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபா நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்றே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க வேண்டிய தேவையோ அல்லது நோக்கமோ அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அருந்தித இராஜினாமா

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

நீதி கோரி வடகிழக்கில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!