சாய்ந்தமருதில் நேற்று வியாழக்கிழமை (27) தண்ணீரில் வீழ்ந்து ,மூழ்கிய காரில் பயணித்தபோது உயிர் துறந்தவர்களுக்காகவும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தும், படுகாயமுற்றும் மற்றும் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தமதும், கட்சியினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சகல நிவாரணங்களையும் தாமதமின்றி வழங்குமாறும், சம்பவ இடங்களில் மீட்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு இயலுமான வரை அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு கட்சி உறுப்பினர்களையும், தொண்டர்களையும் அவர் கேட்டுக் கொள்கின்றார்.
தற்போதைய மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் அபாயம் நிலவுவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு.
