அரசியல்உள்நாடு

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை தோல்வி – தவறான ஆலோசனை வழங்கியதாக ரவி கருணாநாயக்க எம்.பி குற்றச்சாட்டு

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இந்த தீர்வை வரி விவகாரத்தில் அரச அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.

அமெரிக்காவின் இறக்குமதிகளுக்கு வரி விலக்களிப்பதால் பாரிய பாதிப்பு இலங்கைக்கு ஏற்படாது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி விடயத்தில் நாட்டின் நலன் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்த வேண்டும். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு 44 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டது.

இலங்கையின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அமைய 44 சதவீத தீர்வை வரி 30 ஆக குறைக்கப்பட்டது. அதிகளவான வர்த்தக இருப்பினை கொண்டுள்ள ஆசிய வலய நாடுகளுக்கு இலங்கையை காட்டிலும் குறைவான வரி வீதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட 30 சதவீத வரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியுடன் அமுல்படுத்தப்படவுள்ளது.

44 சதவீத வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அமெரிக்காவின் இறக்குமதிகளுக்கு இலங்கையில் விசேட வரி விலக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டோம்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டோம்.ஆனால் இவ்விரு விடயங்கள் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இந்த தீர்வை வரி விவகாரத்தில் அரச அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.அமெரிக்காவின் இறக்குமதிகளுக்கு வரி விலக்களிப்பதால் பாரிய பாதிப்பு இலங்கைக்கு ஏற்படாது.

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஆசிய வலய நாடுகள் புதிய வரி கொள்கையை அமுல்படுத்தி பயனடைந்துள்ளன. இலங்கை தரப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அமெரிக்காவிடமிருந்து மாத்திரம் எவ்வாறு முழுமையான வரி மறுசீரமைப்பின் உச்ச பயனை எதிர்பார்க்க முடியும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

ஹரின், மனுஷ கட்சியில் இருந்து இடைநிறுத்தம்

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி