உள்நாடுபிராந்தியம்

அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை.

அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள், கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகள் அற்ற நிலை மற்றும் போதைப் பொருட்கள் விநியோகம் என பல பாரதூரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இறக்காமம் பிரதேச மாணவர்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் இறக்காமம் பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இறக்காமம் பிரதேச சபையினால் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தொடரில், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான ஒழுங்கு முறைமைகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள், இறக்காமம் கோட்ட பாடசாலை அதிபர்கள், கல்வி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகம், சமய நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் விசேட கூட்டம் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல். முஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது டன் தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பை மேற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல், கல்வி செயற்பாட்டில் ஈடுபடும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் , பிரத்தியேக வகுப்புக்களை நடத்துபவர்கள் தனது நிறுவனங்களையும் பிரதேச சபை 1987 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்.

பதிவை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

மேலும், தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை சுகாதார வசதிகளை கொண்டதாகவும், கற்றல் செயற்பாட்டிற்கு ஏற்றதாக போதுமான இடவசதி, காற்றோட்டம், இருக்கைகள் என்பன அமைய பெற்றிருத்தல் வேண்டும்.

அதை சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினூடாக உறுதிப்படுத்தல், எமது இறக்காமம் பிரதேசத்திலே இயங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்களை பிரதேச சபையின் கீழ் பதிவு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு இந்த பதிவுகளை இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை பொது அறிவித்தலாக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அறிவிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டது.

மாணவர்களுக்கான போதுமான ஆரோக்கியமான விளையாட்டு, ஓய்வு, உடல் ஆரோக்கியம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தரம் 06 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக தனியார் வகுப்புக்களானது பி.ப 3.00 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நடாத்தப்படல் வேண்டும்.

இரவு நேர வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது அதோடு பாடசாலை நேரங்களில் எவரும் தனியார் வகுப்பு நடத்துவது சட்டப்படி குற்றமாகும், பாடசாலைகளினால் விசேட செயற்திட்டங்கள் மூலம் நடைபெறும் க.பொ.த / சா.த மாணவர்களுக்கான வகுப்புகள் பாடசாலைகளில் மாத்திரம் மாலை 6.00 மணி தொடக்கம் 08.00 மணி வரை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் ஆடை பாடசாலை சீருடை கட்டாயம் அணிந்து வர வேண்டும். ஆண்கள் வெள்ளை நிற சேட்டுடன் செல்லல் வேண்டும், பாடசாலை மாணவர்களுக்கான சிகை அலங்காரம் தொடர்பான புதிய சிகை அலங்கார உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவது டன் பின்பற்றாதவர்களின் உரிமை பத்திரத்தை இரத்துச் செய்தல், பிரத்தியேக தனியார் வகுப்புக்களுக்கான பண அறவீடு தொடர்பாக அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுடனும் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வரையறை செய்தல்.

மாணவர்களின் ஓய்வு மற்றும் ஆன்மீக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், போயா தினம், ஞாயிற்றுக்கிழமை மு.ப 08 – 12.00 மணி வரை, தவணை பரீட்சை நடைபெறும் நாட்கள் மற்றும் ரமலான் மாதத்தின் உடைய இறுதி பத்து நாட்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதை தடை செய்தல், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி அஹதிய்யா பாடசாலை நடைபெறுவதால் மு.ப 08.00 மணி முதல் பி.ப. 12.00 மணி வரை எந்த பிரத்தியேக வகுப்புக்களும் நடாத்துவதற்கு அனுமதி இல்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ள சூழலில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடங்கள், பாழடைந்த வீடுகள், வளவுகள், போதை வியாபாரம், இருள் சூழ்ந்த சந்திகள், டெங்கு பெருகக் கூடிய இடங்கள் என்பவற்றை இனங்கண்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்தல், மேற்படி தீர்மானங்களை உடன் அமுலுக்கு கொண்டு வருவதுடன் இவை தொடர்பாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு தெளிவூட்டும் அமர்வு தவிசாளர் தலைமையில் மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

பாடசாலைகளை மீள் திறப்பது தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு

நேற்று கொழும்பில் 292 கொரோனா தொற்றாளர்கள்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி