உள்நாடு

அனைத்து சுகாதார பணியாளர்களின் விடுமுறை ரத்து

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று (28) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காகச் சுகாதாரத் துறை தொடர்பான அவசர நிலையைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி, ‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று (28) முதல் மறு அறிவித்தல் வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களும் மற்றும் நிறுவனத் தலைவர்களும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வைத்தியசாலைப் பணியாளர்களைச் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களில் வைத்திய ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்படக்கூடிய மற்றும் அனர்த்தம் இல்லாமல் தமது வீடுகளுக்குச் செல்லக்கூடிய நோயாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அபாயகரமான கட்டிடங்களில் அமைந்துள்ள மருத்துவ உபகரணங்கள், நோயாளர் பராமரிப்புப் பிரிவுகள் ஆகியவற்றைச் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ வாயுக்கள் போன்றவை தட்டுப்பாடு இன்றிப் பேணப்படுவதற்கு உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளைக் கருத்திற்கொண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அருகிலுள்ள வைத்தியசாலைகளுடன் கலந்துரையாடி மாற்றிக் கொள்வதற்கான முன்கூட்டிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அந்த சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

editor

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!