உள்நாடு

அதிபருக்கு எதிராக மேடையில் நேருக்கு நேர் போர்க்கொடி தூக்கிய சனித்மா சினாலி எனும் மாணவியின் தைரியமான குரல்

சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் விருது மறுக்கப்பட்டமை தொடர்பில் மாணவி ஒருவர் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

​கடந்த டிசம்பர் 19ஆம் திகதி கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த விருது வழங்கும் விழாவின் போதே இந்த அசாதாரணமான சூழல் நிலவியது.

நிகழ்வின் போது மேடைக்கு வந்த மாணவி ஒருவர், தான் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைச் செய்திருந்த போதிலும், இறுதி ஒத்திகைகளில் (Rehearsals) கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறி தனக்கு வழங்கப்பட வேண்டிய விருது அநியாயமாக மறுக்கப்பட்டதாக மைக்ரோபோன் ஊடாக பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதன்படி தமக்குரிய விருது மறுக்கப்பட்டதாக மாணவி ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் பாடசாலை பழைய மாணவர் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நீச்சல் வீராங்கனை மற்றும் ஸ்குவாஷ் (Squash) வீராங்கனை ஆகிய இருவருமே பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மிகச்சிறந்த திறமையாளர்கள் என பழைய மாணவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகுதியுள்ள விளையாட்டு நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் முறையான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிகாரிகளிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

விருது வழங்கும் விழா நிறைவடைந்ததும் குறித்த மாணவி பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “நான் பல விளையாட்டு வெற்றிகளைப் பெற்றிருந்தும், ஒத்திகைகளில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறி எனக்கு கிடைக்க வேண்டிய விருது மறுக்கப்பட்டுள்ளது” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பாடசாலை நிர்வாகத்தின் தீர்மானம் குறித்து பொதுமக்கள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

Related posts

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

தொடங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!