உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம்

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

“நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பரீட்சையை நடத்த மாட்டோம்.

எனவே 6 நாட்களுக்கு பரீட்சை இல்லை. பின்னர் மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை பரீட்சை நடைபெறும்.

அத்தோடு, டிசம்பர் 4-ம் திகதிக்கான பரீட்சையே அன்று இடம்பெறும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும்” என்றார்.

பாடங்களை பொறுத்தமட்டில் காலையில் இரசாயனவியல் பகுதி-1 , தொழில்நுட்பம் பகுதி -1 , நாடகம் மற்றும் கலைக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதி-1, மாலை அரசறிவியல் பகுதி-1 ஆகிய பாடங்களே டிசம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு

  • நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 21 நடைபெறும்
  • நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 23 நடைபெறும்
  • நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 27 நடைபெறும்
  • நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 28 நடைபெறும்
  • டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 30 நடைபெறும்
  • டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் – டிசம்பர் 31 நடைபெறும்

இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

மேடை நடிகராக பிரபலமடைந்த செண்டோ ஹெரிஸ் காலமானார்