வகைப்படுத்தப்படாத

சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்கு சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கலகெதர புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார்.

சமூக நீதி, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய அம்சங்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பாரிய செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 18வது திருத்தம் நீக்கப்பட்டமையும் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையும் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும் எனத் தெரிவித்தார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களினூடாக நாட்டில் அனைத்து பிரஜைகளுக்கும் சட்டத்தின் நீதி, சமூக நீதி, சுதந்திரம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் ஆகிய அனைத்திற்கும் பலமான ஒரு அடித்தளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை மிகவும் முறையாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு அண்மையில் குறித்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறினார்.

பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்ற தினம் இன்றாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1972 மே மாதம் 22ம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் மூலம் நீதித்துறை நாட்டில் முழுமையான சுதந்திரமும் ஜனநாயகபூர்வமானதாகவும் மாற்றப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நீதி மன்ற கட்டிடத் தொகுதி நீதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக்கொண்ட இப்புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு 76 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி நீதியரசர்களுக்கான உத்தியோகபூர்வ கூடம், ஆவண காப்பகம், சட்டத்தரணிகளுக்கான ஓய்வு அறைகள், குடும்ப ஆலோசனை அலுவலகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகளுக்கு சட்ட நூல்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சரத் அமுனுகம, நவீன் திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

Kandy SC produce ‘Sevens’ masterclass to be crowned champions

அமெரிக்கா பத்திரிக்கை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

பிஜி தீவுகளில் கடும் நிலநடுக்கம்