அரசியல்உள்நாடு

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை அண்மையில் எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக வேலுகுமார் எம்.பி., ‘பார் பேமீட்’ வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டை தயாசிறி ஜயசேகர முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான காணொளி அவரது முகநூல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த வேலுகுமார், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

இதற்கமைய இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வேலுகுமார் எம்.பியின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிவேந்திரன், கனிஷ்ட சட்டத்தரணி சிவானந்தராஜா உள்ளிட்ட சட்டக்குழுவினர் முன்னிலையாகி இருந்தனர்.

இவ்வழக்கு விசாரணையின் போதே நீதிமன்றத்தால் மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்று வேலுகுமார் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, வேலுகுமாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன என்று அவரின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

Related posts

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

இலங்கை இன்னொரு மொரோக்கோவாக மாற வேண்டாம் – மஹிந்த

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்