உலகம்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் – அவசர நிலையை அறிவித்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது.

இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000 க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும்.

அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகி விட்டது.

இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா.

இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு ஈரான் பெருமளவில் உதவி வருகிறது.

ஹமாஸ் ஒரு பக்கம் தலைவலியை கொடுத்துவர, ஹிஸ்புல்லா அவ்வப்போது குறுக்கே சில தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி வந்தது.

இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. அதற்கேற்றார் போல, ஹிஸ்புல்லாவும் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை வீசியும் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பெய்ரூட் மீது தனது போர் விமானங்களை கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.

அதேபோல் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

Related posts

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

கிர்கிஸ்தான் ஜனாதிபதி இராஜினாமாவுக்கு தயார்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு