அரசியல்உள்நாடு

ரவூப் ஹக்கீமிடம் 200 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, அனுரகுமார கடிதம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் காத்தான் குடியில் வைத்து கடந்த 19ஆம் திகதி தனது மானத்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்காக, 02 பில்லியன் (200 கோடி) ரூபாயை தனக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில நடைபெற்ற கூட்டமொன்றில், ரஊப் ஹக்கீம் தமிழில் தனக்கு எதிராக – அவதூறான, புனையப்பட்ட மற்றும் தீங்கிழைக்கும் கருத்தை வெளியிட்டதாகக் கூறி, சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுர குமார திஸாநாயக்க அனுப்பியுள்ளார்.

அனுர குமார திஸாநாயக்க மே 7, 2019 அன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையை தவறான கருத்துப் பட ஹக்கீம் கூறியுள்ளதாகவும், UTV யின் யுடியுப் சேனலில் ஹக்கீமுடைய அந்த உரை வெளியாகியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதம் வளர்கிறது என அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்ததாக – ஹக்கீம் கூறியுள்ளார் எனவும், மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்கள் மேற்கூறிய அவதூறு அறிக்கை தவறானது, இட்டுக்கட்டப்பட்டது, தீங்கு விளைவிக்கும் வகையிலானது. அந்த அறிக்கை அனுர குமார திஸாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது’ என, அனுர சார்பாக சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீமின் அவதூறான கூற்று, அரசியல் தலைவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபருமான தனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எனவே அநுரகுமார திஸாநாயக்க தனது கோரிக்கைக் கடிதத்தில், தனக்கு 02 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஹக்கீமிடம் வலியுறுத்தியுள்ளார்.14 நாட்களுக்குள் 02 பில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்கப்படாது விட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ளது.

Related posts

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்