உள்நாடு

மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில்.

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினர்.

மிகவும் வேலைப்பளுவில் இருந்த போதிலும், ஜனாதிபதி அந்த மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்விப் பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு, மாணவர்கள் தமது கல்லூரியின் சில குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு குடிநீர் வசதிகளை வழங்கும் நீராதாரம் மிகவும் உப்புத்தன்மை கொண்டதாக காணப்படுவதால், தற்போது கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘RO Plant’ கட்டமைப்பை துரிதமாக நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையைப் பெற்றுக்கொள்ளல், கணனிகள், அழகியல் பிரிவிற்கான கட்டிடத்திற்கான தேவை என்பன தொடர்பில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் கல்வியைத் தொடரும் ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்து விளங்குவதைப் பாராட்டிய ஜனாதிபதி, அவர்களின் எதிர்கால கல்விப் பணிகள் சிறக்க தனது ஆசிர்வாதத்தையும் தெரிவித்தார்.

அதன் பின்னர், மாணவர்கள் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரையும் சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், மாணவர்களின் விளையாட்டு மற்றும் கலைத்திறன்களை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய அதிபர் லக்ஷ்மன் அபேசிங்க மற்றும் ஆசிரியர்கள் சிலரும் மற்றும் பெற்றோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு